சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையேயான அமைக்கப்பட்டுள்ள  கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்  30ம் தேதி திறந்து வைக்கிறார்.

கன்னியாகுமரி கடலில்,  சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, அங்குள்ள திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 30ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்கு சென்ற பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர், திருவள்ளுவர் சிலையில் இருந்து சுவாமி விவேகானந்தர் பாறைக்கு நடந்து செல்வதற்கான கண்ணாடி இழை இணைப்பு பாலம் அமைக்கும் பணியினை  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  இதைத்தொடர்ந்து, அந்த பாதை திறப்பு விழா காணப்பட உள்ளது.

முக்கடல் சங்கமிக்கும், கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், அருகே உள்ள பாறையில் அமைக்கப்பட்டுள்ள  திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.37 கோடி மதிப்பில் 77 மீட்டர் நீளம் 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் செல்லும் போது முக்கடலின் அழகினை பார்க்க வேண்டுமென்ற அடிப்படையிலும், கடலின் சீற்றத்தினால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையிலும் கடின தன்மை கொண்ட கண்ணாடி இழை தரைத்தள பாலமாக (கடல்சார் பாலம்) அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், அந்த பகுதியில்,  பொதுப்பணித்துறை சார்பாக கூடுதலாக படகுகள் வந்து நிற்பதற்காக ரூ.33.80 கோடி மதிப்பில் 100 மீட்டர் நீளம் கொண்ட இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இறங்குதளம் அமைந்த பின் 3 கப்பல்கள் வந்து நிற்கும் அளவுக்கு திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த மாதம் இறுதியில்முதலமைச்சரால் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே இதற்கான பணிகள் 2025 , ஜனவரி மாதத்தில் முடிவடைந்து  பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது டிசம்பர் 30ந்தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. இதில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 25வது ஆண்டு வெள்ளிவிழாவை உலக தமிழர்கள் போற்றும் வகையில் சிறப்பாக நடத்த கூறியுள்ளார்.

இதற்கு ஒருங்கிணைப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயனை நியமித்துள்ளார். டிச.29ம் தேதி தூத்துக்குடிக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, 30ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அங்கு மாலையில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இணைக்கும் பாலத்தை திறந்து வைக்கிறார்.  அப்போது,  லேசர் அலங்கார விளக்குகளை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். மறுநாள் காலை திருவள்ளுவர் படக்காட்சியை பார்வையிடுகிறார். பின்னர் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி இன்று(20ம் தேதி) முதல் ஜன.2ம் தேதி வரை கன்னியாகுமரி சீரோ பாயின்ட், சன்செட் பாயின்ட், விவேகானந்தபுரம், கோவளம் ஆகிய பகுதிகள் மற்றும் பிற பகுதிகளுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.