சென்னை: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பதற்கான அறிவிப்பு  பெயர்ப் பலகையை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் நோக்கில் தமிழகஅரசின் அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களில்  தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதன்படி,  தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது

. முதல்கட்டமாக 47 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. இதற்காக அன்னைத் தமிழில் அர்ச்சனை என்று எழுதப்பட்டுள்ள  பெயர்ப் பலகையைமுதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.  அதில், அர்ச்சகரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருக்கும்.

இன்று முதலில் வெளியிடப்பட்டுள்ள பெயர்ப்பலகை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.