டெல்லி: பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணமாகிறார். நேற்று செல்வதாக இருந்த நிலையில், பிரதமர் குஜராத்தில் இருந்ததால், இன்று டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அதையடுத்து, உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தாயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் உடலை மயானத்துக்கு தனது தோளில் சுமந்து சென்றார். தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். அங்கு அவரது உடல் தகனம் காலை 10மணிக்குள் முடிவடைந்தது.
இதையடுத்து, பிரதமர் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரதமரின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டிருந்த டிவிட்டில், தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது என குறிப்பிட்டிருந்ததுடன், பிரதமரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் டெல்லி செல்வதாக அறிவித்தார்.
ஆனால், நேற்றைய தினம் பிரதமர், குஜராத்தில் இருந்ததால், அவரை டெல்லியில் சந்திக்க முடியாது என்பதால், அவரது பயணம் இன்று (31ந்தேதி) மாற்றப்பட்டது. இதையடுத்து, பிரதமருக்கு ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
இன்று காலை விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.