
சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் மின்சார கார்தயாரிப்பு நிறுவனம், அதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளது.
இந்த ஆலைக்கான அடிக்கல்லை கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டினார். இதையடுத்து, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஆலைக்கான பணிகள் இரவு பகல் என ஜரூராக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், முதற்கட்டமாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரூ.1120 கோடியில் 114 ஏக்கர் நிலத்தில் ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆலையின் உட்புறம் அனைத்து மெஷின்களும் பொருத்தப்பட்ட நிலையில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த மாதம் (ஜூலை 31) ஆலையை முதல்வர் ஸ்டாலின் வின்பாஸ்ட் மின்சார கார் ஆலையை திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இ வாகனங்கள் தயாரிப்பில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பட்டு வரும் நிலையில், முதன்முறையாக உலகின் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் கார் நிறுவனம் தனது மின்சார கார் தயாரிப்பை தூத்துக்குடியில் தொடங்கி உள்ளது. இது எலன் மஸ்கின் டெஸ்லா மின்சார காருக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.