சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த இரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இயக்குனர் பாரதிராஜா. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாரதிராஜாவிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் விசாரித்திருந்தார். அவர் உடல்நலம் தேறி கடந்த இரு நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவரது நீலாங்கரை வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார்.
இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில், இயக்குனர் பாரதிராஜாவுக்கு, மூளையில் ஏற்படும் குழப்பநிலை, நினைவு இழப்பு, வழக்கத்துக்கு மாறாக அல்லது விநோதமாக நடந்துகொள்வது உள்ளிட்டவை ஆல்டெர்டு சென்சோரியம் (Altered sensorium) என அழைக்கப்படும் நோய் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 26ம் தேதி எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ பிரிவில், பல்துறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்’ என தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இன்று திடீரென பாரதிராஜாவின் நீலாங்கரை இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் உடல்நலம் விசாரித்தார். அப்போது கவிஞர் வைரமுத்துவும், அமைச்சர் நேரு மற்றும் பாரதிராஜா மகன் மனோஜ் உடனிருந்தனர்.