சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாளான 15ந்தேதி தொடங்கி வைக்க வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காஞ்சிபுரத்தில் உள்ள  அண்ணா நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்துகிறார் என காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றுப் பெருமை வாய்ந்த காஞ்சிபுரம் மண்ணில் பிறந்து தனது அடுக்கு மொழி பேச்சாற்றலாலும்-எழுத்தாற்றலாலும்-அறிவாற்றலாலும் தமிழக மக்களை கவர்ந்த மாபெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் காலை 10 மணியளில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கிடும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

தொடக்கவிழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த உளுந்தையிலிருந்து வருகிற 15-ந்தேதி காலை 8 மணியளவில் புறப்பட்டு காஞ்சிபுரத்திற்கு வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் நகரிலிருந்து இவ்விழா நடைபெறும் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானம் வரை 40 கி.மீ. தூரத்திற்கு வழி நெடுகிலும் கழகத்தினரும், பொதுமக்களும் எழுச்சியுடன் நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

அண்ணா பிறந்த புனித பூமிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னேரி கரை, கம்மாள தெரு சந்திப்பு, சங்கரம் மடம், மேற்கு ராஜா வீதி வழியாக காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் வந்து அடைகிறார். அங்குள்ள பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்குகிறார்.

பின்னர் அவர் இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம் வழியாக சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு செல்கிறார். அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

அதன்பிறகு அவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெறும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அவருடன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

இதே போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு கூறி உள்ளார்.