சென்னை:   தோள்பட்டை எலும்பு முறிவுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மதிமுக தலைவர் வைகோவை, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு..க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

வைகோ கடந்த மே மாதம் 25ந்தேதி அன்று, மதிமுக நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக நெல்லையில் தனது சகோதரர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு கால் இடறி விழுந்ததில் அவரது  தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக, தூத்துக்குடி சென்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

வைகோவின் உடல் நிலை குறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவறி விழுந்த தகவலறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னை அழைத்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்வர் தெரிவித்தார்

. அரசியலில் வைகோ இழந்தது அதிகம். ஆனால் தனது நேர்மை, தியாகத்தால் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறார். அதனால் தான், அரசியல் எல்லைகளை கடந்து அவர் நலம்பெற வேண்டும் என அனைவரும் தங்கள் விருப்பத்தை என்னிடம் தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டனர். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. அவருக்கு செய்யவிருப்பது சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. : இதனிடையே, அவரது உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது, அப்போலோவில் வைகோவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,  40 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் என்றும், வைகோவுக்கு  தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, ஒரு வாரத்துக்குப் பாா்வையாளா்கள் யாருக்கும் அனுமதி இல்லை எனவும், வைகோ நலமுடன் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு பின் ஓய்வெடுத்து வரும் வைகோவை இன்று (ஜூன் 1) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது துரைவைகோ மற்றும் மருத்துவர்களிடம் வைகோவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.