சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 3,268 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் உயர்கல்வித் துறை சார்பில் ரூ.156.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள் , முக்கிய ஏரிகளின் கரைகளை மேம்படுத்துதல் உள்பட பல திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 426.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3268 குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.10.2024) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 426 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3268 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் குப்பைமேடு திட்டப்பகுதியில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் 85 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணி முத்து நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 73 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் 438 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், டோபிகானா திட்டப்பகுதியில் தூண் மற்றும் நான்கு தளங்களுடன் 31 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் 272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சந்திரயோகி சமாதி திட்டப்பகுதியில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 38 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் 240 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; இராதாகிருஷ்ணபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 25 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;
ஈரோடு மாவட்டம், குள்ளங்கரடு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 37 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் 416 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அக்கரைகொடிவேரி திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 21 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் 256 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 30 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் 288 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ;
கோயம்புத்தூர் மாவட்டம், சி.எம்.சி.காலனி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 25 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் 222 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வெரைட்டிஹால் ரோடு திட்டப்பகுதியில் தரை மற்றும் ஐந்து தளங்களுடன் 24 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் 192 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;
தஞ்சாவூர் மாவட்டம், வலையன் வயல் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 19 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், டாக்டர் ஜே.ஜே.நகர் பகுதி – 2 திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 12 கோடியே 47 இலட்சம் ரூபாய் செலவில் 108 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்;
என மொத்தம் 426 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3,268 குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இன்றைய தினம் முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. “நம் குடியிருப்பு, நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 118 திட்டப் பகுதிகளில் 4,505.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 39,915 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் க. விஜயகார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உயர்கல்வித்துறை சார்பில் ரூ.156.5 கோடி செலவில் கட்டப்பட்ட வகுப்பறைகள் ஆய்வகங்கள், கலையரங்கம், விடுதிகள், உள்விளையாட்டு அரங்கங்களையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.156.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.10.2024) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 156 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், கலையரங்கம், விடுதிகள், உள்விளையாட்டு அரங்கங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை உயர்கல்வித் துறை சார்பில் 778 கோடி ரூபாய் செலவிலான கல்விசார் கட்டடங்கள் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் முதலமைச்சரால் உயர்கல்வித் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்:
உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 14 கோடியே 19 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடங்கள்;
சென்னை, தரமணி மையத் தொழில்நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள அச்சு தொழில்நுட்பப் பயிலகம், நெசவு தொழில்நுட்ப கல்லூரி, தோல் தொழில்நுட்பப் பயிலகம், வேதியியல் தொழில்நுட்பப் பயிலகம் மற்றும் மாநில வணிகக் கல்வி பயிலகம் ஆகிய ஐந்து சிறப்பு நிறுவனங்களில், 49 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆய்வகக் கட்டடங்கள், வகுப்பறைகள், முதல்வர் அறைகள், தேர்வு அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கல்விசார் கட்டடங்கள்;
சென்னை, தரமணி, டாக்டர் தர்மாம்பாள் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 18 கோடியே 18 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்கள்; மதுரை மாவட்டம், அண்ணா பல்கலைக் கழக மண்டல வளாகத்தில் 15 கோடியே 65 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடங்கள்; திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 7 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கக் கட்டடம்;
பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிலும், வேலூர், தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 65 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவிலும், போடிநாயக்கனூர், அரசு பொறியியல் கல்லூரியில் 8 கோடியே 66 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவிலும் மற்றும் காரைக்குடி, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் 8 கோடியே 67 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கங்கள்; காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் 4 கோடி ரூபாய் செலவில் உடற்கல்வி துறைக்கான தரைதள கட்டடம் மற்றும் நுண்கலை துறைக்கான முதல் தளக் கட்டடம்;
திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 10 ஆய்வகக் கட்டடங்கள்; என மொத்தம் 156 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் . எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி ஆணையர் த.ஆபிரகாம், இ.ஆ.ப., கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.98.21 கோடி மதிப்பீட்டில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்துதல் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின்கீழ் பகுதியை அழகுபடுத்துதல் ஆகிய 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.98.21 கோடி மதிப்பில் ஏரிக்கரைகள், மேம்பாலத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணி, பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரை மேம்பாடு, வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணி ஆகிய புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை: சென்னையில் ரூ.98.21 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 98.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கனான் ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணி, என மொத்தம் 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக இருந்து, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது. சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைகேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், நிலவகைப்பாடுகளில் உபயோக மாற்றங்களை முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ஐந்து ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுப்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது குறித்த விவரங்கள்:
பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி
சென்னை, பெரும்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 4.61 ஏக்கர் பரப்பளவில் 23.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய இயற்கை எழிலுடன் கூடிய சுற்றுச்சூழல் குளம், பறவை கண்காணிப்பு கோபுரம், உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;
முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகேயுள்ள முடிச்சூர் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 2.40 ஏக்கர் பரப்பளவில் 20.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய பூங்கா, இப்பூங்காவில் செயல்திறன் பகுதி, பருவகாலத் தோட்டம், மழைத் தோட்டம் என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;
அயனம்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி சென்னை, அயனம்பாக்கம் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 4.26 ஏக்கர் பரப்பளவில் 20.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;
வேளச்சேரி ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி
சென்னை, வேளச்சேரி ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 1.91 ஏக்கர் பரப்பளவில் 19.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலாவும் தளம், படகு சவாரி, மகரந்த சேர்க்கை பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;
சீக்கனான் ஏரிக்கரையை மேம்படுத்தும் பணி
செங்கல்பட்டு மாவட்டம், சீக்கனான் ஏரிக்கரையை மேம்படுத்தும் விதமாக சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் 9.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை, யோகா பயிற்சி பகுதி, ஏரியை பார்வையிடும் பகுதி என பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்;
வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் பணிகள்
சென்னை, வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியை அழகுபடுத்தும் விதமாக 2.14 ஏக்கர் பரப்பளவில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகிய பூங்கா, இப்பூங்காவில் இயற்கை நடைபாதை, பசுமை பூங்கா, புல்வெளி, சிறுவர் விளையாட்டுத் திடல், சுவர் ஓவியங்கள், சிற்பங்கள், உடற்பயிற்சி இயந்திரங்கள் என பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள்;
என மொத்தம் 98.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.