சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கட்டப்பட்ட உள்ள மேம்பால பணிக்கு இன்று காலை அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, சுமார் 13.30 கி.மீ. நீளத்திற்கு 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம், திருவான்மியூரில் ECR–Lattice Bridge சாலை சந்திப்பிற்கு முன்பாக தொடங்கி, உத்தண்டியில் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடற்கரை சாலையான இ.சி.ஆர்-ல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய நிலையில் இதற்கு முன்பாக திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டால் முற்றிலுமாக போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என்ற அடிப்படையில் இந்த பணிகள் தொடங்கப்படவுள்ளது.
2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சென்னையில் பெருகு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரைக்குமான வழித்தட சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி 13 கி.மீ நிளத்திற்கு ரூ.2100 கோடி மதிப்பீட்டில் இந்த சாலை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த மேம்பால பணிகள் தனியார் பங்களிப்புடன் ஹைப்ரிட் ஆனுட்டி மாடல் (HAM) மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலம், திருவான்மியூரில் ECR–Lattice Bridge சாலை சந்திப்பிற்கு முன்பாக தொடங்கி, உத்தண்டியில் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவழிப் போக்குவரத்துக்காக 17.25 மீட்டர் அகலத்துடன், 5.5 மீட்டர் உயரத்தில், நான்கு வழித்தட சாலை மேம்பாலம் முழு நீளத்தில் அமைக்கப்படவுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நீலாங்கரை மற்றும் அக்கரை போன்ற இடங்களில் இருந்து மேலேறும் மற்றும் கீழிறங்கும் சாய்வுப் பாதைகள் (Ramps) அமைக்கப்படுகின்றன. மேலும், அக்கரை, நீலாங்கரை மற்றும் Lattice Bridge சாலை போன்ற முக்கிய சந்திப்புகள் மேம்படுத்தப்படுவதுடன், சில பகுதிகளில் தற்போதுள்ள சாலைகள் ஆறுவழிச் சாலைகளாக அகலப்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டத்தின்கீழ், சாலை வரைகுறிகள், சாலை குறியீட்டு பலகைகள், பிரதிபலிக்கும் மற்றும் சூரிய சக்தி ஸ்டட்கள், ஒலி தடுப்பு சுவர்கள், பாதுகாப்பு தடுப்புகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அத்துடன், தூண்களுக்கிடையிலான பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளும், உயர்த்தப்பட்ட வழித்தடம் முழுவதும் தொடர்ச்சியான எல்.இ.டி. விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டம், நிறைவேற்றப்படுவதன் மூலம், கிழக்கு கடற்கரை சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சென்னை மாநகர மக்கள் விரைவான பயணம் மேற்கொள்வர் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]