சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அமெரிக்கா புறப்படுகிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே  வரும் 22ஆம் தேதி அமெரிக்கா புறப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்வராக அறிக்கப்பட்டது. அவரது 15 நாள் பயணத்துக்கு மத்தியஅரசும் ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா புறப்படும் தேதி 27ந்தேதி என மாற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல், மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.  2030-ம் ஆண்டுக்குள்  தமிழ்நாட்டில், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது.  அதற்காக, ஜனவரியில், உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை கூட்டி, தொழில் முதலீடுகளை பெற்று வருகிறது.  சென்னையில் 2024 கடந்த ஜனவரி மாதம்  நடைபெறற உலக முதலீட்டாளர்கள்  மாநாட்டில் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து அவ்வப்போது,  சிறிய அளவில் பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, கடந்த அண்டு முதலமைச்சர் ஸ்டாலின்,  துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகள், லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு சென்று அந்நாட்டின்  தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், நடப்பாண்டு தொழில் முதலீட்டுக்காக  அமெரிக்கா செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இந்த பயணம் ஜூலை மாதத்தில் இருக்கும் என  ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார். ஆனால்,  மக்களவை தேர்தல்  மற்றும் அரசு பணி காரணமாக, அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டு  ஆகஸ்ட் 15க்கு பிறகு செல்வார் என கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 22ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் , அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினருடன் அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது.  சுமார் 15 நாட்கள் இந்த பயணம் இருக்கும் என்றும்,  இதற்காக,   மத்திய அரசிடம் முறைப்படி ஒப்புதல்   கோரப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு ஆகஸ்ட் 22 முதல் 15 நாள் பயணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், தற்போது அவரது அமெரிக்க பயணம் ஆகஸ்டு 27ந்தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அமெரிக்க செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்,   அங்கு 15 நாட்கள் வரை அவர் தங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். தொடர்ந்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக வம்சாவளியினரையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வருடன் அமைச்சர் டிஆர்பி ராஜா, முதல்வரின் செயலர்கள், தொழில் துறை செயலர், தொழில் வழிகாட்டி நிறுவன அதிகாரிகளும் அமெரிக்கா செல்ல உள்ளனர்.