சேலம்; கனவு காண்பது நான் அல்ல, முதல்வர் ஸ்டாலின்தான் பகல் கனவு காண்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க., என்றும் மக்கள் பணியில் இருக்கும். எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை. கொள்கைக்காக அமைக்கப்பட்டது. தி.மு.க., கொள்கை கூட்டணி . திமுக கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல; மக்கள் கூட்டணியாகவும் உள்ளது பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்கள். அதுபோல் இ.பி.எஸ்., காத்துக் கொண்டிருக்கிறார். தனது கட்சியை வளர்க்க முடியாதவர் அடுத்த கட்சியின் கூட்டணி உடையாதா என காத்திருக்கிறார். தி.மு.க., கூட்டணி உடையப்போகிறது என்கிறார் இ.பி.எஸ்; அவர் கற்பனையில் இருக்கிறார் என்று நினைத்தேன், ஆனால் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்  என விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று  சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னை கனவு காண்பாதாக கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  நான் கனவு காண்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவர்தான் பகல் கனவு காண்கிறார். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவும் அதிமுகவுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளது.

திமுகவை பொறுத்தவரை குடும்பத்தில் உள்ளவர்கள் பதவிக்கு வர முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள்தான் பதவிக்கு வர வேண்டும் என திமுக கூட்டணி அமைக்கிறது. கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் முதலமைச்சரானார். தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியுள்ளார்.

திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பது போல் மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். பொய்யை பொருந்துவது போல் கூறினால் மெய் திருதிருவென முழிக்குமாம்.. அந்த பழமொழியை போல் உள்ளது.

திமுகவில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் உயர் பொறுப்புக்கு வர முடியும். மத்தியில் பொறுப்பு வாங்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் பிரம்மாண்டமான திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான். 562 கோடியில் அந்த திட்டத்தை வகுத்து அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதும் நான், அதை துவக்கி வைத்ததும் நான்தான். ஒரே ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய அந்த திட்டத்தை ஆட்சிக்கு வந்து 41 மாதங்கள் ஆகியும் திமுக முடக்கி வைத்துள்ளது.

100 ஏரி திட்டத்தினால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வந்துவிடும் என்று அச்சத்தில் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். தமிழக மக்களின் மகத்தான ஆதரவால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது திமுகவால் முடக்கப்பட்ட 100 ஏரி திட்டத்தை நாங்களே நிறைவேற்றிக் கொடுப்போம்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.