தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் ₹150.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் உருவ சிலையை திறந்து வைத்தார். முன்னதாக விருதுநகர் சென்றவர், பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில், செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை முதலமைச்சர் திறந்து வைத்து, பூங்காவினை சுற்றிப்பார்த்தார்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணி அளவில், ஸ்பிக் நிறுவனத்தில் 22 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில், தமிழகத்தி லேயே முதன் முதலாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த தொழிற்சாலையானது தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவு குளத்தில் ₨150.4 கோடி மதிப்பில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், தங்கம் தென்னரசு, மேயர் ஜெகன் மற்றும் எம்.எல்.ஏ.க் கள் உள்பட அதிகாரிகள், ஸ்பிக் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து இதென்மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியை பெருக்கும் வண்ணம் ரூ.1,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் புதிய பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த பர்னிச்சர் பூங்கா மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
முதல்வர் தூத்துக்குடி வருகையையொட்டி, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ்குமார் தலைமையில் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி. திருநாவுக்கரசு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.