சென்னை:  2வருவாய் கோட்டாட்சியர், 8 வட்டாட்சியர் மற்றும் திருப்போரூர், சின்ன சேலத்தில் 2 சார்கருவூல அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருப்போரூர் மற்றும் சின்ன சேலத்தில் ரூ.2.11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .  நிதித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் ரூ. 1.11 கோடி செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் ரூ. 1 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ. 30.73 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் கட்டிங்களை திறந்து வைத்தார்.

அதுபோல, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.8.2022) தலைமைச் செயலகத்தில், நிதித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூரில் 1 கோடியே 11 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் 1 கோடியே 4 ஆயிரத்து 606 ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேம்பட்ட நிர்வாக வசதிக்காகவும், அரசுக்கு ஏற்படும் தொடர் வாடகை செலவினத்தைத் குறைக்கவும், மின் ஆளுமை (e-Governance) திட்டங்களை துரிதமாக செயல்படுத்தவும், விலை மதிப்புமிக்க முத்திரைத்தாள்கள் மற்றும் சேம பாதுகாப்பு பொருட்களை பாதுகாக்கவும், ஓய்வூதியர்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கவும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின்  (Drawing & Disbursing Officers) பட்டியல்களை துரிதமாக  ஏற்பளிக்கவும், போதிய இடவசதியின்றி வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் சார் கருவூல அலுவலகங்களுக்கு தமிழ்நாடு அரசால் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதன்மூலம், பொது மக்களுக்கும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும்,  ஓய்வூதியர்களுக்கும் விரைவாக சேவை வழங்க வழிவகை ஏற்படும். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் 4305 சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 11 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம்,  சின்ன சேலத்தில் 2680  சதுர அடி பரப்பளவில் 1 கோடியே 4 ஆயிரத்து 606 ரூபாய் செலவிலும், கட்டப்பட்டுள்ள இரண்டு கருவூல அலுவலகக் கட்டடங்களை  முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., கருவூல கணக்குத்துறை ஆணையர் திரு. க. விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள் இன்று (4.8.2022) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 30 கோடியே 73 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார். வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக்  கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் 2கோடியே 12இலட்சத்து 24ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை (வடக்கு) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் 2 கோடியே 12 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்; கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலையில் 4கோடியே 25இலட்சத்து 53ஆயிரம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 3கோடியே 6இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவிலும், கல்வராயன்மலையில் 4கோடியே 25இலட்சத்து 45ஆயிரம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம்,

திசையன்விளையில் 2 கோடியே 79 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 2 கோடியே 75 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஏரலில் 3 கோடியே 78 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 2 கோடியே 79 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 2 கோடியே 79 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும்  கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள்; என மொத்தம் 30 கோடியே 73 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 8 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் திரு. எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப.,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் திரு.குமார் ஜெயந்த், இ.ஆ..ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.