சென்னை: 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்து, அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.35.25 கோடி மதிப்பிலான 391 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போருது, முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 71 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை காணொளி காட்சிவாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.35.25 கோடி மதிப்பிலான 391 வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.07.2024) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சிவகங்கை, தேனி, திருவாரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.71.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 35 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 391 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனை திறம்பட செயல்படுத்தி, தமிழ்நாடு அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது.
புதிதாக கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல் தங்களது ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்க வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நல்ல அலுவலக சூழலில் பணியாற்ற ஏதுவாகவும், பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம் 2008-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 290 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 244 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் திட்டக்கூறு மூலம் சிவகங்கை மாவட்டம் – கண்ணன்குடி, மானாமதுரை, சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் திருப்பத்தூர், தேனி மாவட்டம் – தேனி மற்றும் கம்பம், திருவாரூர் மாவட்டம் – கொரடாச்சேரி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – தியாகதுருகம் மற்றும் ரிஷிவந்தியம், மதுரை மாவட்டம் – மேலூர், இராமநாதபுரம் மாவட்டம் – இராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டம் – துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, பெரணமல்லூர், போளூர், கன்னியாகுமரி மாவட்டம் – தக்கலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – வையம்பட்டி, வேலூர் மாவட்டம் – காட்பாடி ஆகிய இடங்களில் 71 கோடியே 94 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 391 வாகனங்களை வழங்குதல்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலர்கள், செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும் உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ளவும், இப்பணிகளை திறம்பட கண்காணிக்க ஏதுவாகவும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 35 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 391 வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள், செயற் பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை அலுவலர்களிடம் வழங்கினார்.
கழக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் ரூ.83.80 கோடி மதிப்பிலான 725 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பா.பொன்னையா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.