சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள  சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

 துணை ஜனாதிபதிக்கான தேர்தல்  நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கோவையைச் சேர்ந்த  சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். துணைஜனாதிபதி தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  ராதாகிருஷ்ணனுக்கு திமுக உள்பட தமிழக எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவர் அமோக வெற்றி பெற்றார்.   அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழக முதல்வர் ஸ்டாலின்  சிபி.ஆருக்கு தனது வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார். அவரது சமூக வலைதளமான  எக்ஸ் பதிவில், இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஏற்ப அவர் தனது கடமைகளை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல முன்னாள் முதல்வரும்,  எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  வெளயிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்திய திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள ஆளுநர் சி.பி. ராதாகிருண்ஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகத் தேர்வு செய்தமைக்கு இந்தியப் பிரதமர் மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், தேசியத் தலைவர் நட்டாவிற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் சி.பி. ராதாகிருண்ஷ்ணன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.