சென்னை: மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், சசிகலாஉள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். அவரது உடல் , சென்னை தண்டையார்பேட்டையில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மதுசூதனின் உடலுக்கு அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை சென்னை, தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் , மறைந்த அ.தி.மு.க. அவைத் தலைவர் திரு. மதுசூதனன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் மதுசூதனனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், மற்றும் கே.பி.முனுசாமி, உள்ளிட்டோரும் அதிமுக முன்னனி நிர்வாகிகளும் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் வந்து மதுசூதனன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின் அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதுசூதனன் உடல் மதியம் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.