கள்ளச் சாராய விவகாரத்தை அடுத்து கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்தும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட் டம் கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில் கருணாபுரம் காலணியைச் சேர்ந்த 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கள்ளச்சாராயம் அருந்தியதாலேயே அவர்கள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருவார்பூர் சாலையில் கள்ளச்சாராய வியாபாரி கன்றுகுட்டி (எ) நாராயணன் கள்ளச்சாராயம் விற்று வருவதாக ஊர்மக்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், இவர்கள் இறப்புக்கு கள்ளச்சாராயம் காரணமில்லை என்றும் இறந்தவர்களில் ஒருவர் குடிப்பழக்கம் இல்லாதவர் என்பது அதிகாரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜாதவத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் சர்ச்சையானதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரை இடமாற்றம் செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஷ்ரவன் குமாருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்படுவதாகவும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டு புதிய டிஎஸ்பியாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.