சென்னை: விபத்தில் சிக்கிய பிளஸ்2 மாணவி ஆம்புலன்சில் வந்து பரீட்சை எழுதிய நிலையில், அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதையடுத்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சென்னை கோடம்பாக்ம் பகுதியைச் சேர்ந்த  12ம்வகுப்பு படித்து வரும் மாணவியான சிந்து என்பவர், வீட்டின் மாடியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ஏற்பட்ட விபத்தில், கால் எலும்புகள் முறிந்ததால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும்  12ம் வகுப்புத் தேர்வை எழுதினார். இந்த தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின்  மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார்.

இதனையடுத்து மாணவி சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சிந்துவிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கினார். முதலமைச்சருடன் புகைப்படம் எடுக்க மாணவி விரும்பியதையடுத்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.