சென்னை: வக்பு திருத்த மசோதா குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வக்பு சொத்துகளை பாதுகாக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.
சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம். வக்பு திருத்தச் சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் வக்பு திருத்த சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. சட்டத்தில் பல பிற்போக்குத்தனமான விதிகளுக்கு நீதித்துறை இடைக்கால தடை விதித்ததில் மகிழ்ச்சி.
உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மூலம் வக்பு உடமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் 17ந்தேதியும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அடுத்த விசாரணை நடைபெறும் வரை அதிகாரப்பூர்வ பதிவு ஆவணங்கள் இல்லாமல் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வக்ஃப் சொத்துக்கள் முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் வரை அனைத்து வக்ஃப் சொத்துக்களும் ரத்து செய்யப்படவோ மாட்டாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கு விசாரணை நடைபெறும் காலக்கட்டத்தில் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்கள் ஆகியவற்றில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மத்திய அரசு தரப்பின் உத்திரவாதத்தை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வக்பு சட்டத்தின் படி வக்பு கவுன்சிலில் எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே வக்பு என பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் மீது எந்த புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டார்.
மேலும் வக்பு சட்ட திருத்தம் விவகாரத்தில் ஒரு வாரத்தில் மத்திய அரசு எழுத்துப் பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அதன் மீது அடுத்த ஐந்து நாட்களுக்குள் எதிர்மனுதாரர்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதையும் பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில், நூற்றுக்கணக்கான மனுக்கள் தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் அவை அனைத்தையும் விசாரிக்க முடியாது என்றும் ஏதாவது ஐந்து வழக்கை மட்டுமே விசாரணைக்கு உகந்ததாக எடுத்துக்கொண்டு மற்ற வழக்குகள் அனைத்தையும் இடைக்கால நிவாரணம் கோரிய மனுக்களாக கணக்கில் எடுத்துக்கொண்டு முடித்து வைப்போம் எனவும், எந்த ஐந்து மனுக்களை விசாரிக்க வேண்டும் என்பதை மனுதாரர்களை கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், வழக்கின் விசாரணையை மே 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.