விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு அளித்திருந்த திருமதி மு.பாண்டிதேவிக்கு, அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கன்வாடி பணியாளர் பணியிடத்திற்கான பணிநியமன உத்தரவையும் வழங்கினார்.
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று மதியம் 12.40 மணியளவில் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மேயர் இந்திராணி, முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலின் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை மதுரையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர், தொடர்ந்து, அங்குள்ள மாநகராட்சி பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து காலை 11மணி அளவில், விருதுநகர் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், 2லட்சம் சதுர அடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ரூ.70.57 கோடியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் கூடிய புதிதாக ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து, சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற பெண் பாண்டிதேவிக்கு அங்கன்வாடி ஊழியருக்கான பணியாணையை வழங்கினார்.
பின்னர், அரசுத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு பணி விளக்க அரங்குகளையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாகம்- கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம்தாகூர், தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிகள் வாழ்த்துரையாற்றினர். நிறைவில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் நன்றி கூறினார்.