சென்னை தலைமைச்செயலகத்தில், இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆவின் நிறுவனத்தின் பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் 10 கோடியே 61 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட 2 பால் பண்ணைகள், 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை மற்றும் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, கடலூர் மாவட்டம், ம.பொடையூரில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9067 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்று அடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4 இலட்சம் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 34 இலட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும், 2 இலட்சம் லிட்டர் பால், ஆவின் நிறுவனத்தால் வெண்ணெய், பால் பவுடர் போன்ற உபபொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
கழக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக 94.41 கோடி ரூபாய் செலவில் புதிய பால் பதப்படுத்தும் மற்றும் பால் பாக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள், புதிய ஐஸ்கீரீம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், ஆய்வுக் கூடங்கள், பால் கொள்முதல் பிரிவுக் கட்டடங்கள், நிருவாக அலுவலகக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஆவின் நிறுவனம் பால் பொருட்களை கொண்டு இளைய தலைமுறையினரை கவரும் வகையில் பலாப்பழ ஐஸ்கிரீம், குளிர்ந்த காஃபி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், வெண்ணெய் கட்டி (Butter Chiplets). பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒய்ட்னர் போன்ற பல்வேறு புதிய பொருட்களை தயாரித்து விற்பனை செய்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்
பால் நுகர்வோர்களுக்கு தரமான பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் விதமாக கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் 2 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட பால் பண்ணை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலில் 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட பால் பண்ணை;
நுகர்வோர்களுக்கு தரமான தயிர் மற்றும் மோர் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் விதமாக, திருவள்ளுர் மாவட்டம், காக்களூர் பால் பண்ணையில் 3 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை;
திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் 1 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நோய்க் கிருமிகளை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம்; என மொத்தம் 10 கோடியே 61 இலட்சம் ரூபாய் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
புதிய கால்நடை தீவன தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுதல்
பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளின் கலப்புத் தீவன தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட கால்நடை தீவன ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
ம.பொடையூர் கிராமத்தில் 6.77 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள இந்த தீவன தொழிற்சாலையால் இப்பகுதியைச் சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், கடலூர், விழுப்புரம் மற்றும் அருகில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் கறவைமாடுகளுக்கு தரமான கலப்புத் தீவனம் கிடைக்கப் பெறும். இதன்மூலம், பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பால் உற்பத்தியாளர்களின் வருவாயும் உயரும்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., பால்பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு.வினீத், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.