புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் அதுபோல, விராலிமலையில் ஐடிசி (ITC) நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையையும் திறந்து வைத்து உரையாற்றினார்.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை இனாம்குளத்தூர் பிரிவு சாலை ரவுண்டானாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தத்ரூபமாக வீரர் காளையை அடக்குவது போன்று ஜல்லிக்கட்டு சிலை அமைக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. இந்த மண் வீரம் நிறைந்த மண். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அதிகம் நடைபெறும் மாவட்டம் புதுக்கோட்டை. இது வீரர்கள் பிறந்த மண். இதனால் இந்த மண்ணுக்கு வலிமை அதிகமாக உள்ளது என்றார்.
தொடர்ந்து, விராலிமலையில் அமைந்துள்ள ஐடிசி (ITC) நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, தொழில்மயமான மாநிலங்களில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியில் ஐடிசி நிறுவனம் தொழிற்சாலை தொடங்கியதில் மகிழ்ச்சியளிக்கிறது; பாராட்டுகிறேன்.
ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம், 351 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், மறு பொட்டலமிடுதல் மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகளுக்காக தனது இரண்டாம் கட்ட திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை இன்று துவக்கி உள்ளது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய இந்த பகுதியில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் இத்திட்டத்தினைத் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொழில் திட்டங்களை செம்மையாக உலகதரத்தில் செயல்படுத்தி வருகின்ற ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் பல்வேறு சமுதாய மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஐ.டி.சி. நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐ.டி.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் மேலும் அதிக முதலீடுகளை செய்திட முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஐ.டி.சி. நிறுவனம் தனது வெற்றிப் பயணத்தினைத் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாயில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு வருகிறார். கவிநாடு பெரிய கண்மாயில் பாசன பரப்பளவு 1,766 ஏக்கர்; சுமார் 30 கிராமங்களில் உள்ள பாசன நிலங்கள் பயனடைகின்றன என்று கூறியவர், இதேபோல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிறைந்த மண். புதுகை மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் வறட்சி மாவட்டமான புதுக்கோட்டை வளம்பெற்ற மாவட்டமாவது உறுதி. இத்திட்டத்துக்கு தற்போது நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. துரித நடவடிக்கை எடுத்து விரைவில் இத்திட்டத்துக்கு நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டுவேன். இது பசுமை நிறைந்த பூமியாக மாறும் என்றும், இலுப்பூர், – புதுக்கோட்டையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படுவது உறுதி. விரைவில் நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டுவேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.