போலி கல்விச் சான்றிதழ் அச்சடித்து வழங்கியதாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காதவர்களுக்கு பிரபல பல்கலைக்கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் வழங்கப்படுவதாக கடலூர் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது.

இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள கோவிலம் பூண்டி கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு வந்த போலீசார் சான்றிதழ்களை கைப்பற்றி சோதனை செய்ததில் அவை அனைத்தும் போலி சான்றிதழ்கள் என தெரியவந்தது.

அதேவேளையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் போலியாக கல்வி சான்றிதழ் தயாரிக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிதம்பரம் மன்மதசாமி நகரைச் சேர்ந்த தீட்சிதர் சங்கருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக தீட்சிதர் சங்கர், நாகப்பன் ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணையில் கேரளா பல்கலைக்கழகம், கர்நாடகா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பெயரில் 5,000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 கம்ப்யூட்டர்கள், லேப்டாப், பிரிண்டர், செல்போன் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்களை பெற்றவர்கள் யார் யார் என்ற விவரமும் அவர்கள் பணியாற்றி வரும் அலுவலகம் பற்றிய தகவல்களை விசாரித்து வருகின்றனர்.