தங்கள் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை போலியானது என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரமும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி இரவு, சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம், 2007ம் ஆண்டு தான் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதியை வாங்கி கொடுப்பதற்காக லஞ்சம் பெற்றதாகவும், இதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு உள்ளதாகவும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இவ்வழக்கில் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உட்பட 14 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில், மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு, 2008ம் ஆண்டு லஞ்சமாக ப.சிதம்பரம் 9.96 லட்சம் ரூபாயை பெற்றார் என்றும், இவ்விவகாரத்தில் போலி நிறுவனங்களை தொடங்கி, ஆலோசனை கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் என்று கார்த்தி சிதம்பரமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, பீட்டர் முகர்ஜி, முன்னாள் நிதிஆயோக் தலைவர் சிந்துஸ்ரீ குல்லர், முன்னாள் மற்றும் தற்போதைய அரசு அதிகாரிகளான அஜித்குமார் டங்டங், ரபீந்திர பிரசாத், பி.கே பக்கா, பிரபோத் சக்சேனா, அனூப் கே புஜாரி, கணக்காளர் பாஸ்கரராமன் ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. அரசு தரப்பு சாட்சியாக மாறிய இந்திராணி முகர்ஜி பெயர் அதில் இடம்பெற்றிருந்தாலும், அவர் மீது எவ்வித சட்டப்பிரிவின் கீழும் வழக்கு பதிவாகவில்லை. அதேநேரம் மற்ற நபர்கள் மீது பண மோசடி, குற்றச்சதி, மோசடி, லஞ்சம் பெற்றல் போன்ற பிரிவுகளின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், தங்கள் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பிஐ அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை போலியானது என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், சிவகங்கை தொகுதி எம்.பியும், சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரமும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த புதன்கிழமை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், துறை ரீதியான விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.