டெல்லி: மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு சத்திஸ்கர் மாநில சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.

மோடி தலைமையிலான மத்தியஅரசு, 3 வேளாண் மசோதாக்களை நடைபெற்று முடிந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியது. அதன்படி,  அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுவதாகவும், இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தி வருகிறது.

 அகில இந்திய ககாங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும்,  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை வலியுறுத்தி இருந்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு.  அரசியல் சட்டத்தின் 254 (2)- வது பிரிவு இதற்கு அனுமதி வழங்குகிறது. இதனை பயன்படுத்தி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, முதன்முதலாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் முதன்முதலாக கடந்த 20ந்தேதி (அக்டோபர் 2020)  அன்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மாநிலத்தில் கூட்டப்பட்ட சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாநில அரசு சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மூன்று மசோதாக்களை முதல்வர் அமரீந்தர் சிங் அறிமுகப்படுத்தினார். மேலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து 2வது மாநிலமாக சத்திஸ்கர் மாநில சட்டமன்றத்தில் இன்று  மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி., மாண்புமிகு INCIndia தலைவர் அறிவுறுத்தியபடி, சத்தீஸ்கர் அரசு மோடி அரசின் கடுமையான விவசாய விரோத சட்டங்களை எதிர்கொள்ள, இன்று தொடங்கி சட்டசபையில்  மாநில சட்டத்தில் திருத்தம் செய்யும்.

பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் உள்ள இந்த வரலாற்றுச் சட்டங்கள் நமது விவசாயிகளின் உரிமைகளை நிலைநிறுத்தும் என பதிவிட்டுள்ளார்.

ஆனால், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைகள் அதிகம்’ எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும், அந்தத்துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடியும் தெரிவித்திருக்கிறாகள்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக ஒப்பந்தச் சாகுபடி முறை கொண்டு வரப்பட்டதாகவும், அதேபோல்தான் மத்திய அரசு விவசாயிகளுக்கு உத்தரவாதமான விலை கிடைப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.