ராய்ப்பூர்: கட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார் சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாஹல்.
2018ம் ஆண்டு நடந்த சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்றாலும், சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்தது. மொத்தமுள்ள 11 இடங்களில் 2 இடங்களை மட்டுமே வென்றது காங்கிரஸ்.
எனவே, கடந்த 6 ஆண்டுகளாக முதலமைச்சர் பூபேஷ் பாஹல் வகித்துவந்த மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அவரிடமிருந்து பறித்து, மோகன் மர்காமிடம் வழங்கியது டெல்லி காங்கிரஸ் தலைமை. இதனையடுத்து, கட்சித் தலைவர் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ராய்ப்பூரில் நடைபெற்றது.
அப்போது தனக்கு 6 ஆண்டுகளாக உறுதுணையாக இருந்த நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பாராட்டிப் பேசிய பாஹல், ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். இதனால், கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் கலங்கினர்.
“புதிய தலைவராகப் பொறுப்பேற்ற மோகன் மர்காம் எளிமையான மனிதர் மட்டுமின்றி, கடும் உழைப்பாளி” எனவும் பாராட்டிப் பேசினார் முதல்வர் பாஹல்.