சென்னை
செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாகச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும்-ரஷ்யாவும் கோப்பையைப் பகிர்ந்து கொண்டன. இந்த ஆண்டு(2022)க்கான போட்டியைப் போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தும் முடிவைக் கைவிடுவதாகச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்த நிலையில், போட்டியை தங்கள் நாட்டில் நடத்த பல நாடுகள் முயன்றன.
இதில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.கடந்த 1927 ஆம் ஆண்டுமுதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்யாட் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை ஒரு முறை கூட நடத்த வாய்ப்பு கிட்டாத நிலையில், தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது.
200 நாடுகள், 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் போட்டி என்பதால் விமானப் போக்குவரத்து, தங்குமிட வசதி உள்ளிட்டவை கருத்தில் கொண்டு டில்லி அல்லது சென்னையில் போட்டியை நடத்தப் பரிசீலிக்கப்பட்டது. சென்னையில் போட்டி நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாமல்லபுரத்தில் போட்டி நடைபெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த போட்டிகளை மாமல்லபுரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.