
சென்னை: கொரோனா ஊரடங்கால் ஜெர்மனியில் முடங்கியிருந்த செஸ் நடசத்திரம் விஸ்வநாதன் ஆனந்த், ஒருவழியாக இந்தியா திரும்பினார்.
இவர், ‘பண்டஸ்லிகா’ என்ற செஸ் தொடரில் பங்கேற்பதற்காக, பிப்ரவரி மாதம் ஜெர்மனி சென்றிருந்தார். மார்ச் மாதம் இந்தியா திரும்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அமலானதால், அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அங்கிருந்தவாறே, ரஷ்யாவில் நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பை ஆன்லைன் செஸ் தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார்.
நாட்கள் இப்படி ஓடிய நிலையில், இந்தியாவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், ஜெர்மனியிலிருந்து, டெல்லி வந்து, பின்னர் அங்கிருந்து பெங்களூரு வந்தடைந்துள்ளார்.
பெங்களூரில் தனிமைப்படுத்தலில் உள்ள அவர், விரைவில் சென்னை திரும்புவார் என்றும், பின்னர், இங்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
“ஆனந்த் இந்தியா வந்துவிட்டார். நீண்டநாள் கழித்து அவர் திரும்பியதில் மகிழ்ச்சி. நலமுடன் இருக்கிறார்” என்றுள்ளார் அவர் மனைவி அருணா.
Patrikai.com official YouTube Channel