சென்னை – திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயிலை இந்த மாதம் 7 ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சதாப்தி அதிவிரைவு ரயில் வரிசையில், நிறுத்தங்களைக் குறைத்து வேகத்தை சற்று கூட்டி இயக்கப்படும் ரயிலான வந்தேபாரத் ரயில் சேவை நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
சேருமிடத்தை விரைவாக சென்றடையும் இந்த ரயிலில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்ற போதும் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
புல்லட் ரயில் போல் வடிவமைக்கப்பட்டு தற்போதுள்ள இருப்புபாதையிலேயே செல்லும் இந்த பளபளக்கும் சொகுசு வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தானே முன்னின்று கொடியசைத்து துவக்கி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரயிலை ஜூலை 7 ம் தேதி காணொளி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார்.
இந்த ரயில் ஜோலார்பேட்டையில் மட்டுமே நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு ஏற்கனவே வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மூன்றாவதாக சென்னை – திருப்பதி வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
இதனை அடுத்து சென்னை முதல் நெல்லை வரையிலான படுக்கை வசதியுடன் கூடிய வந்தேபாரத் ரயில் கூடிய விரைவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.