சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை கோட்ஸ் சாலை சந்திப்பு வரை மேம்பால பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதில் வடக்கு உஸ்மான் சாலையின் கோட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை ஏற்கனவே மேம்பாலம் உள்ளது.
தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரும்பு பாலம் அமைத்து தற்போதுள்ள பாலத்துடன் இணைப்பது குறித்து 2021-2022 சட்டசபை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
2023ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கிய நிலையில் தி.நகர் பேருந்து நிலைய சந்திப்பு முதல் ராமநாதன் தெரு அருகில் உள்ள ஜி.ஆர்.டி. நகைக்கடைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த புதிய மற்றும் பழைய பாலங்கள் சந்திக்கும் இடத்தில் இரண்டுக்குமான உயரம் தொடர்பாக பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும், தி.நகர் பேருந்து நிலைய சந்திப்பில் இருந்து இந்த மேம்பாலத்தின் மீது ஏறுவதற்கும் இறங்குவதற்குமான இரண்டு அலகுகள் அமைக்கும் பணியும் நடந்து வந்தது.
இந்தப் பணிகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு செய்த அமைச்சர் கே.என். நேரு 2024 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மழை காரணமாக தாமதமாகும் பட்சத்தில் 2025 பிப்ரவரி மாதம் இதன் பணிகளை முடிக்கும் வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் கே.என். நேரு, தி.நகர் மேம்பால பணிகள் முடியும் தருவாயில் உள்ளதை அடுத்து மே மாதம் இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதேபோல் ஆர்.கே. நகர் பகுதியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலமும் அதே மே மாதம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.