சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை கோட்ஸ் சாலை சந்திப்பு வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் வடக்கு உஸ்மான் சாலையின் கோட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை ஏற்கனவே மேம்பாலம் உள்ளது.
தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரும்பு பாலம் அமைத்து தற்போதுள்ள பாலத்துடன் இணைப்பது குறித்து 2021-2022 சட்டசபை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
2023ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கிய நிலையில் தி.நகர் பேருந்து நிலைய சந்திப்பு முதல் ராமநாதன் தெரு அருகில் உள்ள ஜி.ஆர்.டி. நகைக்கடை வரையிலான பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் இந்த பணிகள் அனைத்தையும் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தி.நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.நகர் பேருந்து நிலைய சந்திப்பில் இருந்து இந்த மேம்பாலத்தின் மீது ஏறுவதற்கும் இறங்குவதற்குமான இரண்டு அலகுகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் பொது மற்றும் வணிகப் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் கே.என். நேரு இந்த மேம்பால பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மழை காரணமாக தாமதமாகும் பட்சத்தில் 2025 பிப்ரவரி மாதம் இதன் பணிகளை முடிக்கும் வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.