சென்னை :
வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படிக்க ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தகுதித்தேர்வான சாட் தேர்வில், சென்னையை சேர்ந்த மாணவர் 1600 க்கு 1600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஏ.பி.எல். குளோபல் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் ஆரவ் அஹுஜா என்ற மாணவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
பார்கிளேஸ் வங்கியின் இயக்குனரான அனுஜ் அஹுஜா-வின் மகனான ஆரவ், தான் 1550 மதிப்பெண்களே எதிர்பார்த்ததாகவும், 1600 மதிப்பெண் வாங்கியிருப்பது தன்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இதன்மூலம் உலகின் முன்னணி கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள இவர், அமெரிக்காவின் மாஸசூட்டஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யேல் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க இருக்கிறார்.
வான் இயற்பியல் துறையில் ஆர்வம் கொண்ட இவர், ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவருடன் இணைந்து கிளாஸிகல் மெக்கானிக்ஸ் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஐந்தாண்டுகள் வரை செல்லக்கூடிய இந்த சாட் நுழைவுத் தேர்வை எழுதிய 50 லட்சம் பேரில் 500 பேர் மட்டுமே 1600 க்கு 1600 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.
ஆராய்ச்சி, பள்ளிப்படிப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும் தனது தங்கையின் படிப்பிற்கு உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக சாட் நுழைவு தேர்வுக்காகவும் தயார்படுத்தி வந்ததாக கூறும் ஆரவ், பரீட்சை சமயத்தில் தினமும் இதற்காகவே படித்துவந்ததாகவும் கூறுகிறார்.