சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் இடுப்பு துண்டுடன் அமர்ந்து பாடம் நடத்துவதும், மாணவிகளின் வாட்ஸப் எண்களுக்கு ஆபாச தகவல் அனுப்புவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்று புகார் எழுந்திருக்கிறது.

கே.கே. நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசிரியராக பணிபுரியும் ராஜகோபால் இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகிறார்.

வகுப்பு நடத்தும் போது, எந்த வித உள்ளாடையும் இல்லாமல் சிறு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு தரையில் குத்தங்கால் போட்டு பாடம் நடத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் வகுப்புக்கு முன் நேரடி வகுப்புகளிலும், அவர் மாணவிகளிடம் ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது, நிர்வாகம் அவரை அப்போது வாய்மொழியாக கண்டித்துள்ளது.

வணிகவியல் பாடப்பிரிவு வகுப்பாசிரியராக இருப்பதால் இவருக்கு அனைத்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் எண்களை அடங்கிய தரவுகளை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதனை தவறான வழியில் பயன்படுத்தும் ராஜகோபாலன், வகுப்பு முடிந்த பின்னரும், மாணவிகளுக்கு வாட்ஸப் மூலம் ஆபாச தகவல்களை அனுப்பி தொந்தரவு செய்திருக்கிறார்.

சினிமாவுக்கு போகலாமா என்பது தொடங்கி, ஆபாச ஜோக்குகள் அனுப்புவது வரை, அனைத்து சிலுமிஷங்களையும் செய்யும் இவர், மாணவிகளின் டி.பி. மற்றும் ஸ்டேட்டஸ்-களில் உள்ள புகைப்படங்களையும் பார்த்து கமண்ட் செய்திருக்கிறார்.

மீறி, புகார் அளித்தால், அவர்களின் மதிப்பெண் குறைக்கப்படும் என்ற மிரட்டலையும் விடுத்துவருவதால், பலரும் இதுகுறித்து தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக மாணவர்கள் தங்கள் பள்ளியில் படித்த பழைய மாணவர்களிடம் தெரிவித்ததை அடுத்து, மாணவர் சங்கம் சார்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளது, மேலும் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் மாணவர்களாக உள்ள சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில், காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளதோடு, புகாரை முறையாக விசாரிக்காத பள்ளி நிர்வாகத்தினர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்,