சென்னை: மக்களை தேடி மேயர் திட்டத்தின்படி, தென்சென்னையின் முதல் நிகழ்ச்சி சென்னை அடையாறு பகுதியில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் வழங்கிய 303 மனுக்களை பெற்ற மேயர் பிரியா, 14மனுக்கள் மீது உடனடி நடிவடிக்கை எடுத்ததார். மேயரின் இந்த நடவடிக்கை குடியிருப்பாளர்கள், வியாபாரி கள், பொதுமக்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேயரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி தாக்கல் செய்தி 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில் ‘மக்களை தேடி மேயர்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக, மக்களை தேடி மேயர் திட்டம், 2023 மே மாதம் 3-ந்தேதி வடசென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார்.
இதையடுத்து தென்சென்னை பகுதியில் முதல் கூட்டம், அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட எல்.பி.சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, அடையாறு மண்டலம் 13-க்கு உட்பட்ட பொதுமக்கள், குடியிருப்போர் சங்கத்தினர், வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினரும்,மேயரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். பலர் தங்களது பகுதி சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா தேவை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களை நேரடியாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியின்போது மேயரிடம் சுமார் 303 மனுக்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் 14மனுக்கள் மீதான கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுத்ததாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் 5 மகளிருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 479 மதிப்பிலான தையல் எந்திரங்களை மேயர் பிரியா வழங்கினார்.
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 21 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கினார். மேலும், 8 பேருக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும் மேயர் பிரியா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளார்கள், அந்தந்த துறைகளுடன் இணைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மண்டலம் 5-ல் நடந்த மக்களை தேடி மேயர் முகாமில் 333 புகார்கள் பெறப்பட்டு 331 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டலம் 6-ல் நடைபெற்ற மக்களை தேடி மேயர் முகாமில் 241 புகார்கள் பெறப்பட்டு, இதில் 160 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அடையாறில் நடந்த முகாமில் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களை தேடி மேயர் திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றே பலரும் கோரிக்கை வைத்தார்கள் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடர்பாகவும் பெரும்பாலான புகார்கள் கிடைத்தது. மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மழைநீர் வடிகால் பணிகள் சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளதோ அந்த இடங்களில் உடனடியாக சாலை பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்”
இவ்வாறு மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.
அடையாறில் நேற்று நடந்த மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேயரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.