சென்னை: சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள இக்கோவில் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழம் பெருமை உடையது. 7ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட தாகக் கருதப்படுகிறது. கோவிலில் சிவன் மருந்தீஸ்வரராகவும் பார்வதி திரிபுரசுந்தரியாகவும் வீற்றிருக்கிறார்கள்.
அந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. விழாவை முன்னிட்டு. சன்னதி விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு, கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், 5 நிலை கிழக்கு ரிஷிகோபுரம், மேற்கு 5 நிலை மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
விஜயகணபதி, சுப்பிரமணியர், மருந்தீஸ்வரர், திரிபுரசுந்தரி, தியாகராஜர், நடராஜர் முதலான சன்னதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்டு ரூ.75 லட்சம் மதிப்பில் பணிகள் நிறைவடைந்துள்ளது.
திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீசுவரர், பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேக செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. கும்பாபிஷேகம் தொடர்பாக மருந்தீஸ்வரர் கோவிலில் சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்ரியா தலைமையில் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கும்பாபிஷேக நேரத்தில் மக்கள் சிவபெருமானை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், அவர்கள் வரிசையில் நின்று தரிசிக்க கோவில் வளாகத்தில் மரக்கட்டைகளால் ஆன தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு 6-ம் கால அவபிருதகால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது. பக்தர்கள், கட்டளைதாரர்கள், அபிஷேகதாரர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாகவும், திருப்பணி உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மேற்கு ராஜகோபுரம் வழியாகவும் கோவிலுக்குள் வந்து தரிசனம் செய்யலாம்.