சென்னை,
தமிழ்நாட்டுக்கு வரும் கிருஷ்ணா நதிநீர் இன்று திடீரென நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை நகருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு டி.எம்.சி. அளவு தண்ணீர், குடிநீருக்காக தேவைப்படுகிறது. ஆனால் குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லை.
தற்போது, பெய்து வரும் வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்குமா என்பதும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரை இடையே ஏற்பட்ட கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி, கடந்த மாதம் 11-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 20-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.
முதலில் வினாடிக்கு வெறும் 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.பூண்டி ஏரிக்கு நேற்று வரை வினாடிக்கு 1300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.
இந்நிலையில் கண்டலேறு அணையிலிருந்து, தண்ணீரை இன்று காலை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டிக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.
ஆனால், இதுகுறித்து ஆந்திர அதிகாரி கூறும்போது, தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், ஒரு வாரத்தில் மீண்டும் நீர் திறக்கப்படும் என்றும் கூறினார்.
கண்டடேறு அணையில் இருந்து பூண்டிக்கு வரும் தண்ணீரை, ஆந்திராவில் உள்ள விவசாயிகள் மோட்டார் பம்பு மூலம் உறிஞ்சி எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பூண்டிக்கு தண்ணீர் வரத்தும் குறைவாகவே வந்தது. இதை தடுக்கவே, தண்ணீரை நிறுத்தியதாக அதிகாரி கூறினார்.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 19.77 அடியாக பதிவானது. 231 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு 195 கனஅடியும், பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 25 கனஅடியும் என மொத்தம் 220 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரியில் கடந்த 20-ந் தேதி நீர் மட்டம் 17.50 அடியாக பதிவாகி வெறும் 85 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பு இருந்தது.
கண்டலேறு அணையிலிருந்து கடந்த 20ந் தேதி முதல் நேற்று வரை 18 நாட்களில் 337 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்ற ஏரிகளான, புழல் ஏரியில் 446 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 491 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 78 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.
பருவமழை இன்னும் தீவிரம் அடையாததால் ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை..பருவமழை தீவிரம் அடைந்தால் தான் சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்ப முடியும்.