சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருதி உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, கங்காபுர்வாலா சத்தியநாராயணா அமர்வில். தமிழ்நாடு அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின், மூன்று மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “கணக்கெடுப்பின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உரிய முடிவை எடுக்க வேண்டும்” என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், கடந்த 2017 – 18 ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ தேர்வில் கலந்து கொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரரான அனுஸ்ரீ என்பவர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தன்னை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் எனக் கருதி, கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இடஒதுக்கீட்டு சலுகைகளையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2014 ம் ஆண்டு தீர்ப்பளித்த போதும், மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை இதுசம்பந்தமான விதிகளை வகுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், மூன்றாம் பாலினத்தவர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஆண்களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனி பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பிரத்யேக விதிகளை வகுக்க வேண்டும் என கூறிய நீதிபதி, எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை ஆண்கள், பெண்கள் பிரிவில் சேர்க்க கூடாது எனவும், 2022ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் மனுதாரரின் சான்றிதழை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி பவானி சுப்பராயன் தனது தீர்ப்பில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருதியிருந்தால், மனுதாரர் தனது வாழ்க்கையின் வழியை கண்டிருப்பார் எனவும், உரிய வாய்ப்புகளை வழங்க மறுத்தால், கல்வித் தகுதி பெற்ற மூன்றாம் பாலினத்தவர்கள், தற்போது சமூகத்தில் உள்ள அசாதாரணமான வாழ்க்கைக்கே தள்ளப்படுவர் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.
அதனால் கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்கி, தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை எனவும், அதனால் அவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.