சென்னை:

மிழகத்தில் கடந்த 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், கன்னியா குமரி மாவட்டத்தில் ஏராளமானோர் பெயர்  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. வாக்காளிக்க வந்தவர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததை அறிந்து வாக்குவாதம் செய்தனர்.

மாவட்டம் முழுவதும் சுமார் 45ஆயிரம் வாக்காளர்களின்  பெயர் நீக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்ட வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் புகாருக்குள்ளான தூத்தூர், இனயம் உள்ளிட்டபகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அது தொடர்பான  அறிக்கை, பெயர் பட்டியல் மற்றும் ஆதாரங்களுடன் மாநிலதலைமை தேர்தல் அதிகாரியிடம்சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில்  2018 செப்.1-க்கு பின்னர் குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல்படி 14.47 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். திருத்தப் பணிக்கு பிறகு இந்த ஆண்டு ஜன.31-ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் 30 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு 14.77 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். பட்டியல் திருத்த பணியின்போது 7,671 மற்றும் துணைப் பட்டியல் வெளியானபோது 2,371 என மொத்தம் 10,042 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

தேர்தல் விதிமுறைப்படி மரணம், இரட்டை பதிவு ஆகிய பெயர்கள் மட்டுமே அகற்றப்பட்டன. 40 ஆயிரம் பெயர்கள் நீக்கம் எனக் கூறுவது தவறான தகவல் என  தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 45 ஆயிரம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான  காரணம் கேட்டு தமிழ் மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்பது  தொடர்பாக விளக்கமளிக்க  வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.