சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று 3வது நாளாக மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. தண்ணீர் வடிய வழியின்றி சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர்புகுந்துள்ளதால், சென்னை மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக, சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்ளவை எட்டி உள்ளதால், உபரி இன்று அடையாறில் திறந்துவிடப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி ள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. நேற்று காலை புயலாக வலுவடைந்து நிவர் புயல் இன்று மேலும் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 3வது நாளாக மழை கொட்டி வருகிறது. நேற்று முழுவதும் தொடர்ந்து மழை பெய்துவந்த நிலையில், இரவிலும் காற்றுடன் மழை தொடர்ந்தது.
இதனால், சிலஇடங்களில் மின்விநியோகம் தடைபட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், வாகனங்கள் போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டுள்ளது. இதற்கிடையில் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்துஅதிகரித்து காணப்படுகிறது. சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், அதிகாரிகள் தொடர்ந்துஏரியின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர். தற்போது ஏரி கடல்போல காட்சி அளிக்கிறது. ஏரி இன்று முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உபரி நீர் அடையாற்றில் இன்று திறந்துவிடப்படும் என தெரிகிறது. (நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறிப்பிடத்தக்கது) இதனால் சென்னை மக்கள் பீதியில் உள்ளனர்.
நேறறு பகலிலேயே புயல் காரணமாக பெய்த மழையால், ராயபுரம், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் 3 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அசோக் நகா் 11-ஆவது அவென்யூவில் சுமாா் 40 அடி மரம் வேரோடு சாலையில் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடசென்னையில் பல இடங்களில் சாலைகள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீண்டும் மீண்டும் தண்ணீர் தேங்கி வருகிறது.
இந்த நிலையில், இன்று புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்றின் வேகம் சுமார் 100 முதல் 120கிமீ வேகத்தில் வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும, சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.