சென்னை: பொதுமக்களின் வசதி மற்றும் நிர்வாக வசதிகளுக்கான சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாவட்ட எல்லைக்குள் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதுபோல, 15 மண்டலங்கள் இருக்கின்றன. அதிகரித்து வரும் மக்கள் தொகையை, மற்றும் புறநகர் பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 22 தொகுதிகள் வருகின்றன. சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியை 2 மண்டலங்களாக பிரிக்க முடிவு  போன்றவை கருத்தில்கொண்டு, நிர்வாக வசதிக்காக சென்னை மாநகராட்சிக்கு உட்டப்பட்ட மண்டலங்கள் 23 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த  2011-ம் ஆண்டில் 155 வார்டுகள் 10 மண்டலங்களுடன் செயல்பட்ட சென்னை மாநகராட்சியில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்த பேரூராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டன. இதையடுத்து மண்டலங்கள் எண்ணிக்கை 15 ஆகவும், வார்டுகள் எண்ணிக்கை 200 ஆகவும் அதிகரிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தை அடைந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி மண்டலங்கள் எண்ணிக்கை 23 ஆக உயர போகிறது. 23 மண்டலங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் புதிதாக உதயமாகும் மண்டலங்களுக்கு குழு தலைவர்கள் கவுன்சிலர்களால் மறைமுக ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மண்டலங்களுக்கும் அதிகாரிகளும், ஊழியர்களும் புதிதாக நியமிக்கப்படுவார்கள். மாநகராட்சி பணிகள் தாமதமின்றி நடைபெறும். மக்கள் வீண் அலைச்சலும் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.