சென்னை: இந்த மாத இறுதிக்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அபராதம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து தொழில்வரி, சொத்து வரி ஆண்டுக்கு இரண்டு முறை வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் தொழில் நடத்துவோர் மற்றும் வருவாய் ஈட்டிடும் தனிநபர் ஆகியோர் தங்களது அரையாண்டு வருமானத்திற்கேற்ப அரையாண்டு தொழில்வரியினை பெருநகர  சென்னை மாநகராட்சி க்குச் செலுத்திட வேண்டும். வருவாய் ஈட்டுவோர் வருவாய் விவரங்களை படிவம்-2ல் பெருநகர  சென்னை மாநகராட்சி க்குத் தெரிவிக்க வேண்டும். அதுபோல சொந்த வீடு, நிலங்கள் வைத்திருப்பவர்கள் அரையாண்டுக்கு ஒருமுறை சொத்து வரி செலுத்த வேண்டும்.

அதன்படி, தற்போது அரையாண்டுக்கான சொத்து வரி (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) செலுத்துவதற்கான கால அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையயொட்டி, சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் நோட்டீசுக்கு விளக்கம் தராமல் இருந்து வரும் உரிமையாளர்களின் சொத்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1200 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், சொத்து வரியை வசூலிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. இதுவரையில் ரூ.490 கோடி தான் வசூல் ஆகி இருப்பதாக வருவாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.