அண்ணா நகரில் உள்ள சர் விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்காவை புதிய வசதிகளுடன் புதுப்பிக்க சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) தயாராகி வருகிறது.

இந்த புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக ₹30 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

1968ம் ஆண்டு அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்களால் திறக்கப்பட்ட இந்த 133 அடி உயரம் கொண்ட கோபுரம் தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்த பூங்காவில் மேலும் புதிதாக செயற்கை நீரூற்றுகள் நிறுவுதல், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், குள மறுசீரமைப்பு, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் 1,000 மியாவாகி மரங்கள் நடுதல் ஆகியவற்றுக்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

2,000 க்கும் மேற்பட்ட மீன்கள் வசிக்கும் இந்த குளத்தில் பாசிகள் அகற்றப்படும், அதே நேரத்தில் கோபுரத்திற்கு புதிய வண்ணப்பூச்சு பூசப்படும் என்று தெரிகிறது.

தற்போதுள்ள 2,196 மீட்டர் நீள நடைபாதைகள் புனரமைக்கப்படும், மேலும் பெண்கள் உடற்பயிற்சி கூடமும் திட்டமிடப்பட்டுள்ளது. 11 நியமிக்கப்பட்ட இடங்களில் இலவச வைஃபை அணுகலை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

வார இறுதி நாட்களில் 10,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவதால், கோபுரத்தின் உச்சியில் பொதுமக்கள் நீண்ட நேரம் செலவிடுவதால், கோபுரத்திற்கான நுழைவு கட்டணத்தை அறிமுகப்படுத்த மாநகராட்சி பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.