பாதசாரிகளுக்கான இடத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) நகரத்தின் 15 மண்டலங்களிலும் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) உருவாக்கியுள்ளது.
நடைபாதைகள் பாதசாரிகள் பயன்படுத்த எந்த தடையும் இல்லாமல் இருப்பதையும், நடவடிக்கை சீராக மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.

தலைமைப் பொறியாளர் (பொது) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு பிரிவிலும் உள்ள உதவிப் பொறியாளர்கள் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் – நிரந்தர கட்டமைப்புகள் மற்றும் தற்காலிக தெரு விற்பனையாளர்கள் – அடையாளம் கண்டு ஆவணப்படுத்தவும், அவற்றை அந்தந்த உதவி நிர்வாகப் பொறியாளர்களுக்கு (AEEs) தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்டவுடன், அடுத்த நாளே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை கூறுவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (TNIE ) வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
AEEக்கள் ஒரு நாள் முன்னதாகவே ஆக்கிரமிப்பு அகற்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும், மண்டல வாரியாக அகற்றும் பட்டியல்களைத் தயாரிக்க வேண்டும், உதவி தேவைப்பட்டால் உள்ளூர் காவல்துறையினருடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று SOP கட்டளையிடுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை அதனை அகற்றுவதற்கு முன்னும் பின்னும் புகைப்படங்கள் எடுத்து GCC செயலியில் பதிவேற்றப்பட வேண்டும், மேலும் குப்பைகள் கொடுங்கையூர் அல்லது பெருங்குடியில் உள்ள நியமிக்கப்பட்ட குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
மீண்டும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க தொடர்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்யும் பணியும் அமலாக்கக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அகற்றும் செயல்முறையை செயல்படுத்துவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அது தீவிரமாகக் கருதப்படும் என்று சுற்றறிக்கை எச்சரிக்கிறது.
இருப்பினும், தெரு விற்பனையாளர்களின் பிரதிநிதிகள் தங்களிடம் இதுகுறித்து ஆலோசிக்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர். “இந்த SOP, நடைபாதைகளில் இருந்து விற்பனையாளர்களை வெளியேற்றுவதைக் குறிப்பிடுகிறது, ஆனால் மாற்று விற்பனை மண்டலங்கள் அல்லது நகர விற்பனைக் குழுவிடம் ஆலோசனை நடத்தப்பட்டதா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை” என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.