சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 8 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதாக போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
சமீப காலமாக மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்ற கருத்து பாஜகவினர் இந்துத்துவா அமைப்பினரால் கூறப்பட்டு வருகிறது. இது சர்ச்சையாகி உள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் எம்.பி. அமோல் கோலே நடித்துள்ள Why I killed Gandhi என்ற குறும்படத்தில் கோட்சே விவகாரம் குறித்த காட்சிகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அந்த படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோட்சேவுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தவர் சென்னையைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன். இவரது கருத்தும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி தேர்தலில் உமா ஆனந்தன் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 134வது வார்டில் போட்டியிட்டிருந்தார்.
ஆனால், இன்று நடைபெறற வாக்கு எண்ணிக்கையின்போது, உமா ஆனந்தனுக்கு வெறும் 8 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. பத்து மாமி போல, உமா ஆனந்தன் 8 மாமி என விமர்சித்து நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை 134 வது வார்ட்டில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்றபாளர் நிறுத்தப்பட்டிருந்தார். அங்கு காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா என்பவரை தோற்கடித்து, பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் பெற்றி பெற்றுள்ளனர்.
பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 5539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2695 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் சுசீலா பாலகிருஷ்ணனை வீழ்த்தினார். அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது