வடசென்னையின் திருவொற்றியூர், மணலி மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள மழைநீர் வடிகால் திட்டங்களுக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான முனிசிபல் பத்திரங்களை பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) வெளியிட உள்ளது.

இதற்கான தீர்மானம் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

வடசென்னை பகுதியில் வெள்ளப்பெருக்கைத் தணிக்க ₹. 3,220 கோடி செலவில் கொசஸ்தலையாறு படுகையில் 769 கிமீ ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் இந்த கொசஸ்தலையார் பேசின் திட்டத்தின் கீழ், ஜிசிசி தனது பங்கான ரூ.470 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

இதில் சுமார் 573 கி.மீ. பணி நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 2,303 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இன்னும் சுமார் 200 கி.மீ. மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நிலுவையில் உள்ள நிலையில் மாநகராட்சியின் பங்களிப்பில் சுமார் 200 கோடி ரூபாயை முனிசிபல் பத்திரங்கள் மூலம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

GCC-யிடமிருந்து தனியார் நிறுவனங்கள் இந்தப் பத்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வாங்கலாம் என்றும், அதை வட்டியுடன் தவணைகளில் சென்னை மாநகராட்சி திருப்பிச் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள குழு இந்த பத்திரங்களை வாங்கக்கூடிய நிறுவனங்களை ஆய்வு செய்யும் என்றும் மேலும் நிதியைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி முதல்முறையாக மேற்கொள்ளும் இந்த நிதி திரட்டும் முயற்சிக்கு ரூ. 26 கோடியை மத்திய அரசு ஊக்கத்தொகையாக வழங்க முன்வந்துள்ளதாகவும் அந்த தொகையை கடனை திருப்பி வழங்க பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.