சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி வரி விதிப்பு, நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
- மகளிருக்கு இலவச சுயதொழில் பயிற்சி
- அரசு மருத்துவமனைகளிறல் முதியோர்களுக்கு தனி நலப்பிரிவு,
- நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி
- ஒப்பந்த அடிப்டையில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்
- 4பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும்
- மாநகராட்சி பூங்காக்களில் சுயஉதவிக்குழுக்களின் உணவகங்கள்
- வரி செலுத்த கியூஅர் கோடு வசதி
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மேயர் திருமதி ஆர்.பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டரங் கில் தாக்கல் செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், துணை மேயர் அமு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
,இந்த பட்ஜெட்டில், மாநகராட்சி பள்ளிகளில் 1.20 லட்சம் மாணவர்களுக்கு ரூ.8.50 கோடியில் தலா 2 சீருடை வழங்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் பள்ளிகளில் பணியாற்ற விரும்புவோருக்கு வளமிகு ஆசிரியர் குழு அமைப்பு; வளமிகு ஆசிரியர் குழு சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:
சென்னை மாநகராட்சியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த திட்டம். இதற்காக மின்னணு பலகைகள் வாங்க ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000/- வீதம் வழங்கப்படும்.
சென்னையில் தெருநாய்களுக்கு வெறிநாய்கடி நோய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கப்படும்.
சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.

சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து வினாடி வினாப் போட்டிகள் நடத்திட பள்ளிகளில் குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கிட பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000 முதல் ரூபாய் 75,000 வரை, 211 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
81 சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும் போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000-முதல் ரூபாய் 1,50,000 வரை வழங்குதல்.
சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும், கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000/ என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள்.
29 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்களில் கூடைப்பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ, கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்களை ஈடுபடுத்தி அவ்விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
26 சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ,கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவமாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப்பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் வழங்கப்படும்.
முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன் மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30.00 இலட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.
சென்னை மாநகர பகுதியில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளை அழகுற பயன்படுத்த திட்டம்.
சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சுய உதவிக் குழுக்களால் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் அமைக்கப்படும்
பெருமநகர மாநராட்சிக்கு உட்பட்ட சென்னை மணலி , ஐஓசில், டோல்கேட், சாலிகிராமம் பகுதிகளில் உள்ள பேருந்து முனையங்கள் மேம்படுத்தப்படும்.
பெண்கள் மற்றும் முதியோர் நலன்:
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற சுகாதார மற்றும் நல மையங்கள், 16 சமுதாய நல மையங்கள், 1 தொற்று நோய் மருத்துவமனை, 2 பகுப்பாய்வு மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் புளியந்தோப்பில் உள்ள 1 காச நோய் மருத்துவமனை ஆக மொத்தம் 303 சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் தாய் சேய் நல சேவைகள், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை வசதிகள், தடுப்பூசி சேவைகள், அவசரகால சேவைகள் மற்றும் ஆய்வக சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது மூட்டு வலி, எலும்பு, தசை சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் மனநலம் சார்ந்த நோய்களுக்கான சிகிச்சை பெற வரும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆகவே, முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதியோர் நலப் பிரிவுகள் தொடங்குவது அவசியமாகிறது.
வெறிநாய்க்கடி தடுப்பூசி:
பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கவும் நாய் இனக்கட்டுபாட்டு விதிகள் 2023க்குட்பட்டு தெருக்களில் பிடிக்கப்படும் நாய்களுக்கு இனக்கட்டுபாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி சென்னையில் சுமார் 1.80 இலட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. வெறிநாய்க்கடி நோயைத்
தடுக்கும் பொருட்டு அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடி தடுப்பூசி போடுவது அவசியமாகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் ரூபாய் 3.00 கோடி செலவில் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும்.
தகவல் தொழில்நுட்பம்:
பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை செய்யும் அலுவலர்கள் செயல்திறன் மிக்க வகையில் செயல்பட வும், பொது மக்களுக்கு பல்வேறு சேவைகளை விரைவாகவும், எளிதாக அணுகக்கூடிய வகையிலும் வழங்குவதில் மாநகராட்சி பல முக்கியமான சவால்களை எதிர்கொள்கின்றது.
தற்போது இணையதளங்கள் மற்றும் பயன்பாட்டில் மொபைல் உள்ள செயலிகளை பயன்படுத்துவோர் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். உலகளவில் மிகப் பெரிய பயனர் அடிப்படையைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டு தளத்தைப் பயன்படுத்தி, இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி, ஒரு நவீன மற்றும் திறன்வாய்ந்த சேவைகளை செயல்படுத்தி அதற்கான தீர்வை வழங்க முடியும். திறன்வாய்ந்த சேவைகள் கீழ்காணும் நான்கு முக்கிய தொகுதிகளின் அடிப்படையில் உருவாக்கப்படும்.
பாதுகாப்பான வாகன நிறுத்துமிடம்:
சென்னை வளர்ந்து வரும் மாநகரமாக உயர்ந்துள்ளது. மிகை அளவிலான வணிக நிறுவனங்கள், கடைகள் பெருகிவருவதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பேருந்து வழித்தடங்கள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலும், பாதசாரிகளுக்கு நடந்து செல்வதில் சிரமமும், பாதுகாப்பின்மையும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க சாலையோரங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் வாகன நிறுத்துமிடத்தை (Smart Parking) கண்டறிவதற்கு செயலி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதனை பொது மற்றும் தனியார் பங்குதாரர்கள் (Public Private Partnership) முறையில் செயல்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாகன நிறுத்துமிடத்தை அறிந்து கொள்ளவும், முன்பதிவு செய்துஉபேயோகப்படுத்தவும் இயலும். இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும். இதனால், வாகன நெரிசல்கள் குறைவதுடன் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, பொதுமக்கள் எளிய வழியில் வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், தற்போது கூடுதலாக QR Code வசதி ஏற்படுத்தித் தருதல். சொத்து வரி மதிப்பீடு, பெயர் மாற்றம் திருத்தத்திற்கான இறுதி ஆணை அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள், தொழில் வரி வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி ஏற்படுத்தப்படும். இதனால், எவ்வித சிரமும் இன்றி உடனடியாக வரிகளை செலுத்த இயலும்.
உள்பட ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.