சென்னை: சென்னையில் ஆயிரம் நகர்ப்புற காடுகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் மியாவாகி வனத்தின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன், சென்னையை பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திறந்தவெளி மற்றும் காலி நிலங்களை பயன்படுத்துவதன் மூலம் மேலும் 1000 நகர்ப்புற காடுகளை அமைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.
நகர்ப்புற காடுகளை உருவாக்க குடியிருப்போர் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர், தனியார் நிறுவனங்கள் தாங்கள் பராமரிக்கும் காடுகளில் தங்களது, அடையாளங்களையும் விளம்பரங்களையும் வைத்துக்கொள்ளலாம்.
மக்களிடையே பசுமை காடுகளை வளர்ப்பத குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில், முதல் படியாக, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காடுகளை பார்வையிட குடியிருப்பாளர்களை அனுமதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
சென்னையில், முதல் மியாவாகி காடு, சென்னையின் மண்டலம் 13 (அடையாறு) இல் உள்ள கெனால் வங்கி சாலையில் 2211.87 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது.
இந்த இடமானது, அடையாறு அருகே உள்ள கோட்டூர்புரம், எம்.ஆர்.டி.எஸ் நிலையத்தின் (மெட்ரோ ரயில் நிலையம்) பின்னால் உள்ளது. இந்த இடம் ஒரு காலத்தில் திடக்கழிவுகள், கட்டுமான குப்பைகள் போன்றவற்றால் நிரப்பப்பட்ட குப்பைக் குப்பையாக இருந்தது. சுமார் 15 லட்சம் செலவிடப்பட்டு, அவற்றை சுத்தப்படுத்தி, 2,000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த மியாவாகி காடு, இப்போது ஏராளமான பட்டாம்பூச்சிகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களின் தாயகமாக உள்ளது.
கொட்டுபுரத்தில் உள்ள மியாவாகி வனத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி நகரத்தில் 30 இடங்களை தேர்வு அங்கு 60,000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது. இதுபோல சென்னை முழுவதும் சுமார் ஆயிரம் நகர்ப்புற காடுகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இதுபோன்ற காடுகளை குடியிருப்பாளர்கள் தாங்களாகவே மரக்கன்றுகளை வளர்த்து பராமரிக்க முடியும் என்றவர், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பாளர் களின் நலச் சங்கங்கள், காடுகளை வளர்க்க ஆர்வமிருந்தாலோ, அல்லது பராமரிக்க ஆர்வம் இருந்தாலோ, அதுகுறித்து, விண்ணப்பித்த 2 நாளில் சென்னை மாநகராட்சி ஒப்புதல் வழங்கும். அதைத் தொடர்ந்து, அவர்கள் அவர்கள் நகர்ப்புற காடுகளை பராமரிக்கத் தொடங்கலாம், ”என்றும் தெரிவித்தார்.
சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பல திறந்த இடங்கள் / காலியாக உள்ள பகுதிகள் சமூக விரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை தடுக்கும் நோக்கிலும், பல்லுயிரியலை மேம்படுத்தவும் ஒரு ஊக்கியாக அதுபோன்ற இடங்கள் அடையாளம் கண்டு, அவற்றை பசுமையின் அடையாளமாக மாற்றும் முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு ஆணையர் பிரகாஷ் கூறினார்.