சென்னை

சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கிய பபாசி நடத்தும் 48 ஆவது புத்தகக் காட்சி யில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த புத்தகக் கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது. புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெற்றது.

இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், மொழிபெயர்ப்பு என பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தினசரி ஆயிரக்கணக்கான வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்தனர்.

கடந்த 17 நாட்களக நடைபெற்று வந்த புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த வருட புத்தகக் காட்சி தொடங்கியதில் இருந்து, நிறைவு பெற்றது வரை மொத்தம் 20 லட்சம் பேர் புத்தகக் காட்சிக்கு வந்ததாகவும் சுமார் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் பபாசி தெரிவித்துள்ளனர்.