
சென்னை
சென்னையில் 2000 கிளிகளுக்கு உணவளிப்பவரை வீட்டை காலி செய்யச் சொல்லி உள்ளதால் பறவைகளுக்கு உணவு இல்லா நிலை ஏற்பட உள்ளது.
சென்னை நகரில் ராயப்பேட்டை பகுதியில் பைகிராப்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு குறுக்கு தெருவில் சேகர் (வயது 65) வசித்து வருகிறார். இவர் புகைப்பட கருவிகளை பழுது பார்ப்பதில் வல்லுனர் ஆவார். இவர் பல புராதன புகைப்பட கருவிகளையும் அரிதான பல புகைப்படங்களையும் சேகரித்து உள்ளார். வாடகை வீட்டில் குடி இருக்கும் இவரை தற்போது வீட்டு சொந்தக்காரர்கள் காலி செய்யச் சொல்லி உள்ளனர். அவர், “நான் காலி செய்துவிட்டால் எனது 2000 குழந்தைகள் கதி என்ன?” எனக் கேட்கிறார்.
ஆம். இவருக்கு இன்னொரு பெயர் ராயப்பேட்டை வட்டாரத்தில் உள்ளது. அது பறவை மனிதர் என்பதாகும். தினமும் இவர் தனது வீட்டு மாடியில் சுமார் 2000 கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். அந்தக் கிளிகளைத்தான் அவர் தனது குழந்தைகள் என கூறுகிறார். சுமார் 50 வருடம் பழமையான ஒரு வீட்டின் ஒரு பகுதியில் 27 வருடங்களாக சேகர் வாடகைக்கு வசித்து வருகிறார். அவருடன் சேர்ந்து மொத்தம் ஐந்து குடும்பங்கள் உள்ளன.

இந்த வீட்டை இடித்து பெரிய கட்டிடமாக கட்ட உள்ளதால் வீட்டு சொந்தக்காரர் இவர்களை காலி செய்ய சொல்லி உள்ளார். சேகர் தனது கிளிகளை முன்னிட்டு இந்த இடத்தை காலி செய்ய தயங்குகிறார். இதனால் வீட்டு சொந்தக்காரர் இவருக்கு பல விதத்திலும் மிரட்டல் விடுத்து வருகிறார். தன்னை நம்பி உள்ள கிளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை தன்னால் காலி செய்ய முடியாது என சேகர் தெரிவித்துள்ளார்.

அவர், “நான் எனது வருமானத்தில் 40% வரை இந்த கிளிகளுக்கு உணவளிக்க செலவழித்து வருகிறேன். மனிதர்கள் காடுகளை அழித்ததினால் இந்த கிளிகள் நகருக்குள் வந்துள்ளன. இங்கும் உணவு கிடைக்கவில்லை எனில் எனது குழந்தைகள் என்ன செய்யும்? முதலில் இங்கு இரு கிளிகள் மட்டுமே வந்தன. தற்போது 2000 கிளிகள் வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பறவைகள் ஆர்வலர் அந்தோணி ராபின், “வழக்கமாக உணவு கிடைக்கும் நேரத்தில் மற்றும் இடத்தில் உணவு கிடைக்கவில்லை எனில் பறவைகள் முதலில் மிகவும் துயர் அடையும். இதற்காகவே எந்த ஒரு மிருகத்துக்கோ அல்லது பறவைகளுக்கோ இரை கொடுத்து பழக்கக் கூடாது என நாங்கள் கூறுகிறோம். அதே நேரத்தில் பறவைகளுக்கு இயற்கையாகவே உள்ள சாமர்த்தியத்தால் அவை தாங்களாகவே இரைகளை தேடிக் கொள்ளும். சேகர் இதற்காக அஞ்ச வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
Photo courtesy ; THE NEWS MINUTE
[youtube-feed feed=1]