மும்பை: பெங்களூரு அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில், பிரமாண்ட வெற்றியை ஈட்டியது. ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் ஆட்டம், இன்று மீண்டும் அட்டகாசமாக அமைந்தது.

சென்னை அணி, முதலில் பேட்டிங் செய்து 191 ரன்களைக் குவித்தது. பின்னர், சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணியில், தேவ்தத் மட்டுமே, அதிகபட்சமாக 34 ரன்களை அடித்தார். மற்றபடி, மேக்ஸ்வெல் அடித்த 22 ரன்கள், இரண்டாவது அதிகபட்ச ரன்கள்.

வேறுயாரும் தேவையான ஆட்டத்தை ஆடவில்லை. சாம் கர்ரனும், ஷர்துலும் தலா 1 முக்கிய விக்கெட்டை கைப்பற்ற, மிக முக்கியமான கட்டத்தில் ஜடேஜா ஜாலம் செய்தார்.

அவர் கிளென் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் இருவரையும் பெளல்டு செய்ததோடு, முன்னதாக வாஷிங்டன் சுந்தரையும் காலிசெய்தார். டேன் கிறிஸ்டினையும் ரன்அவுட் செய்தார். மேலும், அவரின் இன்றைய பீல்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. சாதாரணமாக டைரக்ட் ஹிட்டுகளை அடித்தார்.

இன்றையப் போட்டியில், கடந்த தொடரிலிருந்து முதன்முறையாக வாய்ப்பு பெற்ற இம்ரான் தாஹிரின் செயல்பாடும் பிரமாதமாக இருந்தது. அவர், 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு அல்லாமல், கைல் ஜேமிசனையும் டைரக்ட் ஹிட்டில் ரன்அவுட் செய்தார்.

இன்றையப் போட்டியில், ஜடேஜா ஆல்ரவுண்டராக கலக்க, இம்ரான் தாஹிர், பெளலிங் & பீல்டிங்கில் சிறப்பு செய்தார்.

பெங்களூரு சார்பில், கடைசி 2 விக்கெட்டுகளாக நின்ற சாஹல் மற்றும் சிராஜ் ஆகியோர், 20 ஓவர்களைக் கடத்தும் நோக்கில் களத்தில் நின்று பந்துகளை வீணாக்கினர். சாஹல், 21 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே அடித்தார்.

பெங்களூரு அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 122 ரன்களை மட்டுமே எடுத்து, பெரிய தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தது.